இந்திய சினிமாவில் மிக முக்கியமான பிரபலங்களில் ஒருவர் நடிகை கங்கனா ரனாவத். இந்தி, தமிழ்,தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமான இவர் குறிப்பாக இந்தியில் சூப்பர் ஸ்டாராகவே வலம் வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் எழுத்தாளராக இயக்குனராக தயாரிப்பாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி அவர்களின் வாழ்கை வரலாற்றை இயக்கி தயாரித்து நடித்து வருகிறார். மேலும் அதே நேரத்தில் தமிழில் இயக்குனர் பி வாசு இயக்கி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க நடிகை கங்கனா சமூக வலை தளங்களில் அதிகமாக இயங்கி வருவதும் அதில் சமூதாய பிரச்சனைகள் குறித்து கருத்துகள் தெரிவிப்பதும் வழக்கமாய் வைத்திருப்பவர். அதன்படி நிறைய நேரங்களில் அவரது பதிவுகள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சமீபத்தில் அவரது ட்விட்டர் பக்கம் அதிரடியாக தடை செய்யப்பட்டது அதிலிருந்து மீண்டு மீண்டும் ட்விட்டரில் இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் உலகின் மிகப்பெரிய தொழிலதிபருமான எலன் மஸ்க் “எனக்கு விரும்பியதை சொல்கிறேன், அதன் விளைவாக பணத்தை இழக்க நேரிட்டால், அது நடக்கட்டும்..” என்று பேட்டி ஒன்றில் தெரிவித்த பேட்டியை நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதனுடன் “இதுதான் பண்பு, உண்மையான சுதந்திரம் வெற்றியும் கூட.. அரசியல்வாதிகளுக்கும் தேச விரோதிகளுக்கும் எதிராக பேசியதற்கு ஒரே இரவில் நான் ஒப்பந்தமான 20 முதல் 25 கம்பெனிகள் என்னை ஒப்பந்ததிலிருந்து நீக்கி விட்டனர். இதனால் வருடத்திற்கு எனக்கு ரூ 30 லிருந்து 40 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. ஆனால் நான் இப்போது சுதந்திரமாக இருக்கின்றேன். நான் விரும்பியதை கூற யாரும் தடுக்க முடியாது.. இதே போல் தனக்கு பிடித்ததை செய்யும் எலான் மஸ்க்கை நான் பாராட்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கருத்துகளை அதிரடியாக பகிர்ந்து அதில் எழும் சர்ச்சைகளை நேரடியாக சந்தித்து வருவதை நடிகை கங்கனா ரனாவத் சமீப காலமாக தொடர்ந்து செய்து வருகிறார். இது அவரது திரைப்பயனத்தை எந்தளவு பாதித்தாலும் அதிலிருந்து சற்றும் விலகாமல் தன் கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனை ஆதரிப்பவர்கள் ஒருபுறம் இருக்க எதிர்த்து விமர்சிப்பவரும் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.