இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற இசை ஜாம்பவானாக திகழும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகளும் பாடகியுமான கதீஜா ரஹ்மான் தற்போது தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கதாநாயகனாக நடித்து வெளிவந்த எந்திரன் திரைப்படத்தின் முதல் பாடலான “புதிய மனிதா பூமிக்கு வா” எனும் பாடலை எஸ்.பி பாலசுப்பிரமணியம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களோடு இணைந்து பாடிய கதீஜா ரஹ்மான் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்த மிமி திரைப்படத்தில் "ராக் எ பை பேபி" பாடலையும், இயக்குனர் பார்த்திபன் அவர்கள் உலக சாதனை முயற்சியாக ‘சிங்கிள் ஷாட் நான் லீனியர்’ திரைப்படமாக உருவாக்கிய இரவின் நிழல் திரைப்படத்தில் “காயம்” பாடலையும் கதீஜா ரகுமான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படைப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இடம் பெற்ற “சின்னஞ்சிறு (மறுமுறை)” பாடலை கதீஜா ரஹ்மான் பாடியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகும் "மின்மினி" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் கதீஜா ரஹ்மான். "பூவரசம் பீப்பீ" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் "சில்லு கருப்பட்டி" திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் "ஏலே". தொடர்ந்து மனித உணர்வுகளோடு உரையாடும் அழகான படைப்புகளை கொடுத்து வரும் இயக்குனர் ஹலிதா ஷமீம் கடந்த 2022 ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த புத்தம் புது காலை விடியாதா ஆந்தாலஜி வெப்சீரிஸில் லோனர்ஸ் எனும் எபிசோடை இயக்கியிருந்தார்.

இந்த வரிசையில் அடுத்ததாக ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் மிக முக்கிய திரைப்படம் தான் மின்மினி. இந்திய திரை வரலாற்றிலேயே குறிப்பிடப்படும் திரைப்படமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் மின்மினி திரைப்படத்தை தனது முதல் படமான பூவரசம் பீப்பீ படத்திற்கு பிறகு 2015 ஆம் ஆண்டில் தொடங்கி அதன் முதல் பாதி படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டார். அதன் பின்னர் ஏழு ஆண்டுகள் கழித்து கடந்த 2022 ஆம் ஆண்டு படத்தின் இரண்டாவது பாதியை படமாக்கினார் ஹலிதா ஷமீம். படத்தில் சிறு வயதில் இருக்கும் கதாபாத்திரங்கள் வளர்ந்த பிறகு நடக்கும் கதை களத்திற்கு இரு வெவ்வேறு நடிகர்களை பயன்படுத்தாமல் குழந்தை நட்சத்திரங்களாக 2015ல் நடித்த நடிகர்களையே ஏழு ஆண்டுகளுக்கு பின் அந்த கதாபாத்திரங்களில் இயக்குனர் ஹலிதா ஷமீம் நடிக்க வைத்திருக்கிறார்.

இந்த பெரும் முயற்சி ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தின் கவனத்தையும் மின்மினி படத்தின் மீது திருப்பி இருக்கிறது. 7 ஆண்டுகள் காத்திருந்து ஹலிதா ஷமீம் மின்மினி படத்தை உருவாக்கியது போல முன்னதாக ஹாலிவுட்டில் BOYHOOD என்ற படத்திற்காக இயக்குனர் ரிச்சர்ட் லிங்க்லேட்டர் 12 காத்திருந்து படமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மனோஜ் பரமஹம்சா மின்மினி திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இப்படத்திற்கான இசையமைப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், கதீஜா ரகுமான் அவர்கள் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என இயக்குனர் ஹலிதா ஷமீம் அவரோடு கம்போசிங்கில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தோடு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அந்த பதிவு இதோ…