கடந்த மே மாதம் தமிழில் ரசிகர்களின் மனம் கவர்ந்து இணையத்தில் அதிகம் பேசப்பட்ட தொடர் அமேசானில் வெளியான ‘மாடர்ன் லவ் சென்னை’. இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா மேற்பார்வையில் இயக்குனர்கள் பாரதி ராஜா, ராஜு முருகன், தியாகராஜன் குமாரராஜா, அக்ஷய் சுந்தர், கிருஷ்ண குமார் ராம்குமார் மற்றும் பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோரின் இயக்கத்தில் வெளியான இந்த தொடர் தமிழில் நீண்ட நாளுக்கு பின் ரசிகர்களின் ஆதரவை பெற்றது. இணைய தொடரில் நேர்மறையான கருத்துகளுடன் வெற்றியை பெற்ற மாடர்ன் லவ் சென்னை தொடருக்கு பின் தற்போது அமேசான் பிரைம் அடுத்த இணைய தொடர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமேசான் பிரைம் தயாரிப்பில் உருவாகியுள்ள தொடர் ‘ஸ்வீட் காரம் காபி’. இயக்குனர்கள் பிஜோய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோர் இந்த தொடரை இயக்கியுள்ளனர். மேலும் இந்த தொடரை ரேஷ்மா கட்டாலா, சுவாத்தி ரகுராமன், விநித்ரா மாதவன் மேனன் மற்றும் கிருஷ்ண சாமி ராம் குமார் உள்ளிட்டோர் இந்த தொடரை எழுதியுள்ளனர். எட்டு எபிசொட் கொண்ட இந்த தொடர் வரும் ஜூலை 6 ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இந்த தொடருக்கு தமிழில் வசனம் எழுதியுள்ளார் சிவா ஆனந்த். படத்திற்கு 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

லக்ஷ்மி, மது, சாந்தி உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வீட்டிலே அடங்கி கிடக்கும் மூன்று தலைமுறை பெண்கள் வீட்டிற்கு தெரியாமல் அவர்களுக்கு பிடித்தது போல் ஒரு ஜாலியான ரோட் ட்ரிப் அடிப்படையாக கொண்டு இந்த தொடர் உருவாகியுள்ளது. நீண்ட நாளுக்கு பின் பழம்பெரும் நடிகை லக்ஷ்மி தமிழில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அழுத்தமான வசனங்களுடன் பீல் குட் டிரைலராக வெளியாகியுள்ள ஸ்வீட் காரம் காபி தொடர் டிரைலர் தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. மாடர்ன் லவ் சென்னை தொடருக்கு பின் இந்த தொடரும் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.