தென்னிந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகராக தற்போது வலம் வருபவர் தளபதி விஜய்.இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் படைத்தது பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் சாதனை படைத்தது. வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ள லியோ திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தையொட்டி வெளியாகவுள்ளது. லியோ படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் நடிக்க போகும் தளபதி 68 திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அறிவிப்பின் படி இப்படத்தினை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்த அறிவிப்பினை ரசிகர்கள் மிகப்பெரிய அளவு கொண்டாடி வருகின்றனர். மேலும் இணையத்தில் தளபதி 68 பட அப்டேட் மிகபெரிய அளவு வைரலாகி வருகிறது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தளபதி 68 படம் குறித்தும் அதன் வெளியீட்டு குறித்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்

'பிகில்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைகிறது. #Thalapathy68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏ.ஜி.எஸ்-ன் 25-வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது. சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என கடந்த 25 படங்களாக முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், #தளபதி68 அதன் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. ஏஜிஎஸ், தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் இந்த அற்புதமான கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். அனைத்து பார்வையாளர்களாலும் விரும்பப்படும் சிறந்த பொழுதுபோக்கு படமாக #தளபதி88 இருக்கும்.

சர்வதேச தரத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளார்கள். நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் மற்றும் படத்தலைப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும். கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோரின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள #தளபதி68, 2024-ம் ஆண்டு வெளியாகும்.” என்று குறிப்பிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதையடுத்து தயாரிப்பு நிறுவனத்தின் அறிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் கடந்த ஆண்டு மிகப்பெரிய ஹிட் திரைப்படமான ‘லவ் டுடே’ படத்தை தயாரித்து கவனம் பெற்றது. இந்நிலையில் அவர்களது 25 வது தயாரிப்பு திரைப்படமாக ‘தளபதி 68’ திரைப்படம் உருவாகவுள்ளது. முன்னதாகவே தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய ‘பிகில்’ படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.