சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஆரம்பத்தில் இருந்தே பெற்றிருக்கும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன் லால், விநாயகன், யோகி பாபு, சிவராஜ் குமார், ஜாக்கி ஷராப் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து இன்று ஒட்டு மொத்த திரை ரசிகர்களாலும் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் ஜெயிலர் வெளியாகியுள்ளது. மேலும் பரவலாக ஜெயிலர் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகனாக நடித்த வசந்த் ரவி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன் ரஜினிகாந்த் குறித்து நெகிழ்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், “என் திரை வாழ்க்கையில் ஜெயிலர் மிக முக்கியமான மைல்கற்களில் ஒன்றாகும். பல ஆண்டுகளாக நான் திரையுலகில் கற்று வந்த அர்பணிப்பு, பொறுமை, உறுதிபாடு ஆகியவற்றை இப்படம் கொண்டுள்ளது. அனுபவங்கள் நிறைந்த ஆறு வருட பயணம். இயக்குனர் ராம் சார் என்னை பிரபுநாத் என்று அறிமுகப்படுத்திய ஆகஸ்ட் 11, 2017 அன்று ‘தரமணி’ படம் தொடங்கி இன்று ஆகஸ்ட் 10,2023 ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் சார் மகனாக அர்ஜுன் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்தது வரை அனுபவங்கள் நிறைந்த ஆறு வருடமாக உள்ளது.

ஜெயிலர் திரைப்படம் ஆசிர்வதிக்கப்பட்ட பரிசாக உணர்கிறேன்..என் மீது அசாத்திய நம்பிக்கை வைத்த நெல்சன் சார் அவர்களுக்கும் எனது தொழில் வாழ்கை ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து ஊக்குவித்து ஆதரவளிது வரும் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ரஜினி சார், படப்பிடிப்பில் உங்களுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியும் என் வாழவல் மறக்க முடியாத நினைவாக மாறியது. உங்கள் போதனைகள் எனது நடிப்பு திறமையை மட்டுமல்ல மனித நேயம் மற்றும் வாழ்கையை பற்றிய எனது புரிதலையும் வலுப்படுத்தியுள்ளது. நான் உங்களை சார் என்று அழைத்தாலும் இன்று உங்களை “அப்பா” என்று அழைப்பதை ஒரு ஆசீர்வாதமாக கருதுகிறேன்..

ரஜினி அப்பா, என் ரீல் மற்றும் நிஜ வாழ்க்கையில் என் ரத்தமாரே.... "ஐ லவ் யூ அப்பா, நீங்கள் எப்போதும் எனக்கு ஒரு உத்வேகமாக இருந்தீர்கள்" (ஜெயிலரில் நான் உங்களிடம் சொல்லும் ஒரு வசனம் இது..ஆனால் நான் இப்போது அதை உண்மையிலேயே சொல்கிறேன்)

அன்புடன், வசந்த் ரவி (அர்ஜுன் முத்து வேல் பாண்டியன்)” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது நடிகர் வசந்த் ரவி அவர்களின் பதிவு இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.