இந்திய திரையலக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் நடிகர் துல்கர் சல்மான். தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் துல்கர் சல்மான் தற்போது நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. 1980 களில் நடைபெறும் கேங்க்ஸ்டர் கதைகளம் கொண்ட இப்படத்தில் துல்கர் சல்மான் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் கோகுல் சுரேஷ், செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, ஷம்மி திலகன், அணிகா சுரேந்தரன், நைலா ஷர்மா மற்றும் ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் கல்லரக்கால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் நடிகை ரித்திகா சிங் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ரித்திகா சிங் நடனத்துடன் வெளியான பாடல் தற்போது இணையத்தில் டிரெண்ட்டிங்கில் இருப்பது குறிப்பிடதக்கது. இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் மலையாளத்தில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் ஷியாம் சசிதரன் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்தின் பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் உடன் இணைந்து ஷான் ரஹ்மான் இசையமைக்க பின்னணி இசை அமைத்துள்ளார் ஜேக்ஸ் பிஜாய்.
ஜி ஸ்டுடியோஸ் உடன் இணைந்து துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் தமிழ் நாடு உள்ளிட்ட பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைப்பெற்றது. படத்தின் அறிவிப்பிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. இந்நிலையில் வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 24ம் தேதி உலகமெங்கும் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு.. அதன்படி தமிழில் சூர்யா, மலையாளத்தில் மோகன் லால், இந்தியில் ஷாருக் கான் தெலுங்கில் நாக அர்ஜுனா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் காட்சிக்கு காட்சி துல்கர் சல்மான் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் கிங் ஆஃப் கோதா பட டிரைலர் இணையத்தில் வெகுவாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் ரசிக்ர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் ‘ஹே சினாமிக்கா’, மலையாளத்தில் ‘சல்யூட்’, தெலுங்கில் ‘சீதா ராமம்’, இந்தியில் ‘சுப்’ என இந்திய சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்தார். வெற்றி பயணத்தை தொடர்ந்து தற்போது கிங் ஆஃப் கோதா வெளியாகவுள்ளது. மேலும் இப்படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் வெப் சீரிஸிலும் தற்போது நடித்து வருகிறார். அதன்படி பேமிலி மேன் – பர்சி போன்ற வெற்றி தொடர்களை இயக்கிய இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் தற்போது வெளியாகவுள்ள ‘கன்ஸ் அன்ட் குலாப்ஸ்’ தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். அதன்பின் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகும் ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது.