90 களில் தமிழ் சினிமாவில் ரசிகர்களை தன் நடிப்பில் மிரட்டியும் எதார்த்தமான கதாபாத்திரங்களில் கவர்ந்தும் வந்தவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. கடந்த 1991 ல் இந்தியில் வெளியான ‘கால் சாந்தியா’ திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ஆஷிஷ் வித்யார்த்தி பின் தொடர்ந்து பல படங்களை பாலிவுட்டில் நடித்து வந்தார். தன் அட்டகாசமான நடிப்பிற்காக 1995 ல் துரோக்கால் என்ற படத்திற்காக சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார் ஆஷிஷ் வித்யார்த்தி. அதன் பின் தெலுங்கு, கன்னடத்திலும் அவரது நடிப்பை பார்த்து வியந்து அவருக்கு அழைப்பு வர தென்னிந்தியா பக்கமும் ஆஷிஷ் வித்யார்த்தி நடிக்க தொடங்கினார். அதன்படி அவர் தமிழில் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த 2001 ல் வெளியான ‘தில்’ திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். எலியும் பூனையும் என்ற திரைக்கதையில் அமைந்த தில் திரைப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தியின் நடிப்பு தமிழ் மக்களை வெகுவாக கவர அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தமிழ் சினிமா கொடுத்தது. அதன்படி தொடர்ந்து தமிழில் ஏழுமலை, பகவதி, பாபா, தமிழன், ஆறு, அழகிய தமிழ் மகன், குருவி, கந்தசாமி, அனேகன், என்னை அறிந்தால் போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்தார்.

இதில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் இதுவரை வில்லனாக மிரட்டி வந்த ஆஷிஷ் வித்யார்த்தி கண்டிப்பான அப்பா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு நெருக்கமான நடிகராக மாறினார். இவர் தமிழில் சியான் விக்ரம் மற்றும் தளபதி விஜய் படங்களில் அதிகம் நடித்துள்ளார். தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் ‘என் வழி தனி வழி’. இன்று வரை இந்தி, தெலுங்கும் கன்னடத்தில் பல படங்களில் நடித்தும் மற்றும் இணையத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அவ்வப்போது இவர் சுற்றுலாவின் போது எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாவது வழக்கம். இந்நிலையில் 60 வயதான நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி அஸ்ஸாமை சேர்ந்த ரூபாலி பருவா என்ற தொழில் முனைவோரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக இணையத்தில் சில புகைப்படங்கள் வெளியானது. இதையடுத்து ரசிகர்கள் அவரது திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.