அமெரிக்காவில் திருடன் என நினைத்து பெற்ற மகளை தந்தை தெரியாமல் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் கொலம்பஸ் நகரம் பிபர் பெண்ட் டிரைவ் பகுதியை சேர்ந்தவர் ஹார்ஸ்டன். இவருக்கு ஜெனி (16 ) என்ற மகள் இருந்தார்.

இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி இரவு வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நிறைவு செய்துவிட்டு ஹார்ஸ்டன் மற்றும் அவரது மனைவி இருவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் ஜெனி தனது நண்பர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நிறைவு செய்துவிட்டு மறுநாள் 26 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஜெனி தனது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் பின்புறம் வழியாக ஜெனி வீட்டிற்குள் செல்ல முயற்சித்துள்ளார்.

அப்போது திடீரென வீட்டின் பின்புறம் வழியாக யாரோ நுழையும் சத்தம் உறங்கிக்கொண்டிருந்த ஹார்ஸ்டனுக்கு கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஹார்ஸ்டன் வீட்டிற்குள் யாரோ திருடன் நுழைந்துவிட்டான் என நினைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளார்.

இதையடுத்து திருடனை தடுக்க வேண்டும் என எண்ணிய ஹார்ஸ்டன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் சென்று பார்த்துள்ளார்.

அங்கு இருட்டில் ஒருநபர் வீட்டிற்குள் நுழைய முயற்சிப்பதை ஹார்ஸ்டன் பார்த்துள்ளார். அது திருடன் தான் என நினைத்த ஹார்ஸ்டன் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அந்த நபர் மீது சுட்டுள்ளார்.

துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததும் ரத்த வெள்ளத்தில் அந்த நபர் சுருண்டு விழுந்தார். குண்டு பாய்ந்ததும் ஜெனி கதறி அழுதுள்ளார். தனது மகளின் குரல் கேட்பதை அறிந்த ஹார்ஸ்டன் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அது யார் என்று அருகில் போய் பார்த்துள்ளார்.

அப்போதுதான் அங்கு தனது மகள் ஜெனி துப்பாக்கிக்குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது ஹார்ஸ்டனுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஹார்ஸ்டன் உடனடியாக தனது மனைவியை அழைத்து ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்யச் சொல்லி கூறியுள்ளார். இதையடுத்து ஹார்ஸ்டனின் மனைவி எமர்ஜென்சி எண்ணுக்கு அழைத்து நடந்த விஷயத்தை கூறியுள்ளார். சிறிதுநேரத்தில் தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மருத்துவ ஊழியர்கள் படுகாயமடைந்த ஜெனியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ஜெனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெனியின் பெற்றோர் மகளின் உடலை கட்டியணைத்து “எழுந்து வா ஜெனி ப்ளீஸ்” என்று கதறி அழுதனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸ் ஜெனியின் தந்தை ஹார்ஸ்டன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில் ஜெனி வீட்டின் பின்புறம் எதற்கு சென்றார்? உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருடன் என தவறுதலாக நினைத்து பெற்ற மகளை தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பாதுகாப்புக்காக வீட்டில் உரிமை பெற்று வைத்திருக்கும் துப்பாக்கிகளால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.