திருச்சி அருகே புகார் அளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீசை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்தனர்.

திருச்சி அருகே புலிவலத்தைச் சேர்ந்த சிராஜுநிஷா வின் தம்பி முகம்மது ஜக்ரியா, காதலித்து வீட்டை எதிர்த்து இளம் பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார்.

கடந்த 7 ஆண்டுகளாக மனைவியுடன் வாழ்ந்து வந்த முகம்மது ஜக்ரியா, அக்கா வீட்டின் அருகே வசித்து வந்துள்ளார். ஆனால், இவர்களது காதல் திருமணம் என்பதால், முகம்மது ஜக்ரியாவின் மனைவியுடன், முகம்மது ஜக்ரியாவின் அக்கா பேசாமல் தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், முகம்மது ஜக்ரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு, வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கணவரைக் காணவில்லை என்று அவரது மனைவியும், தம்பியைக் காணவில்லை என்று அவரது அக்காவும் தனித் தனியாக அங்குள்ள புலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

2 பேரின் புகாரையும் புலிவலம் காவல் நிலைய தலைமைக் காவலர், ராமர் விசாரித்து வந்தார். அப்போது, தலைமைக் காவலர் ராமருக்கும், காணாமல் போன முகம்மது ஜக்ரியாவின் மனைவிக்கும் நெருக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், கடும் கோபம் அடைந்த முகம்மது ஜக்ரியாவின் அக்கா, கள்ளக் காதலர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிட்டார்.

அப்போது, இரவு நேரத்தில் காவலர் ராமரின் இருசக்கர வாகனம் தம்பி வீட்டின் முன்பு நிற்பதை கவனித்துள்ளார். இதனையடுத்து, சிராஜுநிஷா அந்த வீட்டை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு, அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் பொதுமக்கள் என அனைவரையும் அழைத்து, அவர்கள் முன்பு கதவைத் திறந்துள்ளார்.

அப்போது, இருவரும் கையும் களவுமாக உறவினர்கள் முன்னிலையில் பிடிபட்டனர். இதனையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக், ராமரை ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனிடையே, பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய போலீசாரே, கணவரைக் காணவில்லை என்று சென்ற பெண்ணிடம், அந்த பெண்ணின் சூழலை தனக்குச் சாதகமாக்கி, அந்த பெண்ணை தனக்குச் சொந்தமாக்க நினைத்த விசயம், ஒட்டுமொத்த போலீசாருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.