அம்மா உணவகங்களில் முதலமைச்சர் பழனிசாமி இட்லி சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா நடவடிக்கையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக உணவு, பால், காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் மட்டும் காலை முதல் மதியம் வரை திறந்திருக்கத் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகம் மற்றும் கலங்கரை விளக்கத்தில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அத்துடன், அம்மா உணவகங்களில் உணவு தரமாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து, அங்கேயே அவர் இட்லி வாங்கி சாப்பிட்டு, உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில அமைச்சர்களும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் இட்லி வாங்கி சாப்பிட்டு, உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர், அம்மா உணவகத்திற்குச் சாப்பிட வந்திருந்தவர்களிடம், உணவின் தரம் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“கொரோனா நோயின் தீவிரம் தெரியாமல் மக்கள் வெளியே நடமாடுகின்றனர்” என்று கவலை தெரிவித்த முதலமைச்சர், “மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

“இ.எம்.ஐ வசூல் என்பது மத்திய அரசின் விவகாரம் என்பதால், மத்திய நிதி அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்” என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.