144 தடையை மீறி செயல்பட்டதாகத் தமிழகம் முழுவதும் 54,400 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவி வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாகப் பிரதமர் மோடி அறிவித்தார்.

54 Thousand people arrested for breaking section 144 in TN

இதனையடுத்து, அனைத்து விதமான போக்குவரத்தும் முடங்கி உள்ள நிலையில், பொதுமக்களும் வீடுகளில் முடங்கி உள்ளனர். அத்துடன், பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றித் திரிய வேண்டாம் என்றும், அப்படி சுற்றித் திரிபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் படும் என்றும் தமிழக போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத சிலர், சாலைகளில் சுற்றித் திரிந்ததாகப் புகார்கள் எழுந்தன. ஆனாலும், தொடக்கத்தில் அப்படி சாலைகளில் சென்றவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பிய நிலையில், பின்னர் நூதன தண்டனை மற்றும் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

அதன்படி, கடந்த 5 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 54,400 பேர் 144 தடை உத்தரவை மீறியதாகக் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

54 Thousand people arrested for breaking section 144 in TN

அதேபோல், 144 தடை உத்தரவை  மீறி சாலையில் சென்றதாக 34 ஆயிரத்து 119 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 10 லட்சத்து 89 ஆயிரத்து 108 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சென்னையில் மட்டும் 144 தடை உத்தரவை மீறியதாக 2 ஆயிரத்து 646 வழக்குகளும், போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக 9 ஆயிரத்து 163 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை கூறியுள்ளது. இதனால், விதியை மீறி சாலையில் செல்லும் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

இதனிடையே, 144 தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணிக்கத் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், வெளியூர்களுக்கு செல்ல இதுவரை 9000 பேர் மின்னஞ்சல் செய்துள்ளதாகவும், சென்னையிலிருந்து செல்ல அவசர தேவைகளுக்காக மட்டுமே பாஸ் வழங்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.