தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் நேற்று வரை சுமார் 74 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் சுமார் 57 பேருக்கு கொரேனா வைரஸ் இருப்பது உறதி செய்யப்பட்டுள்ளது. 

Corona count increases to 57 in TN 124 affected

டெல்லியில் கடந்த மாதம் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடந்த மதரீதியான மாநாட்டில், வெளிநாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட தெலுங்கானாவைச் சேர்ந்த 6 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனையடுத்து, டெல்லியில் நடைபெற்ற மாநாடு தொடர்பான தகவலை மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் தெரியப்படுத்தியது.

அதன்படி, இந்த மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 1,500 பேர் கலந்து கொண்டது தெரிய வந்தது. பின்னர், அவர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனை செய்யும் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, தமிழகம் திரும்பியது 1,131 பேர் என்றும், இதில் 515 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் வீடுகளில் சுகாதாரத்துறையின் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மற்ற 616 பேர் யார் என்பதை அடையாளம் காணும் பணியில் தமிழக போலீசார் தற்போது ஈடுபட்டுள்ளனர். 

Corona count increases to 57 in TN 124 affected

“இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து சுகாதாரத்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் கொரோனா பரவும்” என்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

குறிப்பாக, இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதில், ஈரோட்டைச் சேர்ந்த 17 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த மாநாட்டுக்குச் சென்றவர்களில் சுமார் 50 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இவர்களைத் தவிர மேலும் 7 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும்  57 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில், நெல்லையைச் சேர்ந்த 22 பேரும், நாமக்கலை சேர்ந்த 18 பேரும், கன்னியாகுமரியை சேர்ந்த 4 பேரும், விழுப்புரத்தை சேர்ந்த 3 பேரும், மதுரையை சேர்ந்த 2 பேரும், தூத்துக்குடியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிக்கபட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை மாநகரத்தின் மையப்பகுதியில் உள்ள மேலப்பாளையம் பகுதிகள் அனைத்து அடைக்கப்பட்டு, முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நெல்லை காவல்துறை அறிவித்துள்ளது.