தமிழகத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் யாரிடமும், உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மிகச் சரியாக 38,092 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

No rent for houses in TN

அதேபோல், கொரோனாவால் உலக அளவில் சுமார் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மிகச் சரியாக 7,89,240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், சுமார் 1,66,506 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

இதனிடையே தமிழகம் உட்பட இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, வங்கிகளில் வாங்கிய கடனுக்கான EMI பணத்தை, அடுத்த 3 மாதங்களுக்குக் கட்ட விதிவிலக்கு அளிக்கப்பட்டது.  

இதனையடுத்து, பொதுமக்களுக்காக மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகின்றன.

No rent for houses in TN

அதன்படி, ஊரடங்கால் வீட்டில் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும், தனியார் நிறுவனங்கள் யாரும் பிடித்தம் செய்யாமல் ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் வாடகை வீட்டில் உள்ள யாரும் வீட்டு வாடகை தர வேண்டாம் என்று தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. 

குறிப்பாக, தமிழகத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் யாரிடமும், உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது என்றும் அதிரடியாகத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை கேட்டுக் கட்டாயப்படுத்தும் உரிமையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல், வாடகை கேட்டு வீட்டை காலி செய்ய கட்டாயப்படுத்தினால், அந்த வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கடன்களுக்கான இ.எம்.ஐ மற்றும் வட்டி உள்ளிட்டவை அடுத்த 3 மாதங்களுக்கு வசூலிக்கப்படாது என தமிழக நிதித்துறைச் செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் உத்தரவு அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றும், வங்கி வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என்றும் தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதேபோல், இன்றுடன் ஓய்வுபெறும் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இன்னும் 2 மாதங்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அத்துடன், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல், காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் ஜூன் 30 வரை செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.