கூத்தாடி என்று விமர்சித்தவருக்கு, நடிகை குஷ்பு டிவிட்டரில் காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்ட மசோதாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நடிகர் - நடிகைகள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் மலையாள திரையுலகினர் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு நடிகர்கள் மம்முட்டி, சித்தார்த், பிருதிவிராஜ், நடிகைகள் பார்வதி அமலாபால் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, குடியுரிமை சட்டத்திற்கு எதிராகக் கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்த நடிகை குஷ்பு, “குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவைச் சிதைக்கக் கூடியது. அதிகாரம் படைத்தவர்களால் தேசத்தின் எதிர்காலம் சிதைவதைப் பொறுக்க முடியாது. மோடியும் அமித்ஷாவும் நாட்டின் அமைதிக்கு கேடு செய்கின்றனர். நாடு மத சார்பின்மையால் இயங்குகிறதே தவிர, மதத்தினால் அல்ல” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

நடிகை குஷ்பு கருத்தை, நடிகை கஸ்தூரி எதிர்த்தார். இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்தியர்களுக்குக் குடியுரிமை பறிக்கப்படுவதுபோல பேசி இருக்கிறார். அந்த பொய்யை நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஒழுங்காகத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்களது கருத்துக்களைக் கீழே பதிவிட்டு வந்தனர்.

அதில் ஒருவர், குஷ்புவை கண்டிக்கும் வகையில், “அம்மா கூத்தாடி தாயே மும்பையில் உங்கள் பிறப்பிடம் இருக்கிறதே. அப்புறம் ஏன் பயப்படுகிறீர்கள்” என்று கூறியிருந்தார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த நடிகை குஷ்பு, “உங்க அம்மா பேரு கூத்தாடி என்று சொன்னதுக்கு நன்றி. உங்களோட பெருந்தன்மை பிடிச்சிருக்கு” என்று காட்டமாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது பதிலடி கொடுக்கும் வகையில் பதில் அளித்துள்ளார்.

தற்போது, நடிகை குஷ்புவின் இந்த பதிவு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.