தமிழ்நாட்டில் நேற்று நடந்த முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் அமளி துமளி என பல  குளறுபடிகளுக்கு மத்தியில் நடந்துள்ளன.

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்காகத் தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனாலும், அதையும் தாண்டி பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் குளறுபடி, தர்ணா, வாக்குப்பெட்டி திருட்டு என பரபரப்புடன் நிறைவடைந்தது.

Confusion and mistakes in Tamil Nadu 2019 Local Body elections

அதன்படி, புதுக்கோட்டையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை தாக்கி விட்டு, திடீரென 2 பேர் வாக்குச்சாவடியின் உள்ளே நுழைந்து சீல் வைக்கப்பட்டிருந்த வாய்க்குப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடினர். இதனையடுத்து, காவலரைத் தாக்கி வாக்குப் பெட்டியைத் திருடிச் சென்ற 4 பேர் மீது 7 விரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்துக்குட்பட்ட 3 ஊராட்சிகளில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குச்சீட்டில் சுயேச்சை வேட்பாளரின் சின்னம் மாறி அச்சிடப்பட்டிருந்ததால் வரும் 30 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்துக்குட்பட்ட 15 வது வார்டில், ஸ்பேனர் சின்னத்திற்குப் பதிலாக ஸ்க்ரு சின்னம் அச்சிடப்பட்டதால், வேட்பாளர் அதிர்ச்சியடைந்தார்.

Confusion and mistakes in Tamil Nadu 2019 Local Body elections

திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் பகுதியில் வாக்குப்பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால், 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு 5, 6 வது வார்டுகளில், தலைவர் பதவிக்கான வாக்குச்சீட்டுகளில் உள்ள சின்னத்தில் முத்திரை இடப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளதால், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டன. இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய விளக்கம் அளித்ததால், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

திருவாரூர் மாவட்டம் எடையூரில் அதிகாரிகளின் முத்திரை காரணமாக வாக்குபதிவு நிறுத்தப்பட்டன. வாக்குச்சீட்டுக்குப் பின்புறம் அதிகாரிகள் பதித்த முத்திரை, முன்புறமுள்ள சின்னங்களில் பதிவாகியிருப்பதால் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், அது சரி செய்யப்பட்டு, மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது.

நாகை மாவட்டம் வீரன்குடிகாடு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டுப் போட முயன்ற சத்யசீலன் என்பவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 

Confusion and mistakes in Tamil Nadu 2019 Local Body elections

இதேபோல், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வாக்குப் பதிவு மையங்களில் இயந்திரம் பழுது, வாக்குச்சீட்டு மடிப்பதில் குழப்பம் உள்ளிட்ட காரணங்களால், வாக்குப்பதிவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக, சில இடங்களில், வேட்பாளர்கள் தேர்தல் அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பின்னர், உரிய விளக்கம் அளிக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களில், மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது.  

இதனிடையே, சென்னை பூந்தமல்லி சென்னீர்குப்பம் ஊராட்சியில் வாக்குச்சாவடி மையத்திற்குள் அழைத்துச் செல்ல வீல் சேர் இல்லாததால், சற்றும் யோசிக்காத மருமகள் பாண்டியம்மா, தன் 87 வயதான மாமியாரைக் கையில் தூக்கிச்சென்று வாக்களிக்கச் செய்தார். இதனை அனைவரும் ஆச்சரியமுடன் பார்த்து ரசித்தனர்.