தமிழக உள்ளாட்சித் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Tamilnadu Local Body Elections

தமிழ்நாட்டில் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்காக 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 

இதில், 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தற்போது விறுவிறுப்பாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த 156 ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் 1.30 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

இவற்றில், 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளும், 2546 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளும், 4700 ஊராட்சி தலைவர் பதவிகளும், 37,830 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் சேர்த்து, வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவானது, மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. காலை 9 மணி நிலவரப்படி, 10.4 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக  மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. மேலும், வாக்குப்பதிவானது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், 2 ஆம் கட்ட தேர்தல், வரும் 30 ஆம் தேதி நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணிக்கையானது ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

Tamilnadu Local Body Elections

இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் இயந்திரம் பழுது, வாக்குச்சீட்டு மடிப்பதில் குழப்பம் உள்ளிட்ட காரணங்களால்,  வாக்குப்பதிவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சில இடங்களில், வேட்பாளர்கள் தேர்தல் அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.  

மேலும், திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு 5, 6 வது வார்டுகளில், தலைவர் பதவிக்கான வாக்குச்சீட்டுகளில் உள்ள சின்னத்தில் முத்திரை இடப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளதால், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டன. இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய விளக்கம் அளித்ததால், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.