நடிகர் ரஜினிக்கு, அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமர்சனம் செய்தார். இது தமிழக அரசியலில், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் செல்லூர் ராஜு, “அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று ரஜினி சொன்னார். அந்த வெற்றிடம் என்பது இல்லை என்று ஒரு வானொலி நடத்திய கருத்துக் கணிப்பில் தற்போது உண்மை தெரியவந்துள்ளது.

சுமார் ஒரு கோடி நேயர்கள் பங்குகொண்ட அந்தக் கருத்துக் கணிப்பில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

இதில், ஆளுமையாக்கத் தலைவராக முதலமைச்சர் பழனிசாமியே தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்று பெருமிதத்தோடு கூறினார்.

அத்துடன், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய அவர், “எதிர்க்கட்சிகள் பொதுவாக அப்படித்தான் நடந்துகொள்வார்கள்.

இந்த அரசை அவர்களால் குறை சொல்ல இயலாது. அதனால், சட்டப்பேரவையில் எதிர்வாதம் செய்ய முடியாமல் அவர்கள் வெளியே செல்கின்றனர்” என்று சிரிக்காமல் கிண்டலாகப் பதில் அளித்தார்.