சென்னையில் 43 வது புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் 43வது புத்தகக் காட்சி நேற்று மாலை 5 மணி முதல் தொடங்கியது. இதனை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

CM Palaniswami inaugurates Chennai book exhibition

இதனையடுத்து, புத்தகக் காட்சிக்காகச் சிறப்பாக செயலாற்றிய சிறந்த எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் முதலமைச்சர் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

பின்னர், விழாவில் பேசிய முதலமைச்சர், "உடலுக்கு உடற்பயிற்சி போலவே, மனதிற்குப் பயிற்சி அளிப்பது புத்தகங்களே” என்று புகழாரம் சூட்டினார்.  

மேலும், “புத்தகங்கள் இல்லாமல் மனித இனம் வளர்ச்சி அடைந்திருக்காது என்றும், அடுத்த ஆண்டிலிருந்து புத்தகக் காட்சிக்கு, தமிழக அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்” என்றும் தெரிவித்தார். அத்துடன், இளைஞர்கள் அனைவரும் தொடர்ந்து புத்தகங்களைப் படிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, இந்த புத்தக கண்காட்சியில் சுமார் 800 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல், கோடிக்கணக்கான புத்தகங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.  

CM Palaniswami inaugurates Chennai book exhibition

நேற்று மாலை 5 மணிக்குத் தொடங்கிய இந்த கண்காட்சி, வரும் 21 ஆம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறுகிறது.

இந்தப் புத்தகக் காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். அத்துடன், சாதாரண நாள்களில் மாலை 3 மணிமுதல் 9 மணிவரையும் நடைபெறும். அதேபோல், விடுமுறை நாள்களில் காலை 11 மணி தொடங்கி இரவு 9 மணி வரையும் புத்தக் காட்சி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக கீழடி வரலாற்றை உலகுக்குப் பறைசாற்றும் வகையில், சிறப்புக் கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில், கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் அங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.