வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்குத் தயாராவதாக அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன், அணு ஆயுத சோதனையால், உலகத்தையே இமை உயர்த்தி திரும்பிப் பார்க்கச் செய்தவர். உலக வல்லரசான அமெரிக்காவிற்கே சவால் விடும் வகையில், அணு ஆயுதங்களைத் தயாரிப்பதும், அவற்றைப் பரிசோதிப்பதுமாகத் தொடர்ந்து உலக நாடுகளின் கண்டத்திற்கு ஆளாகி, வரிசையாகச் சர்ச்சையிலும் சிக்கினார் அதிபர் கிம் ஜாங் அன்.

இதனிடையே, ஆண்டு தோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெறும் தனது பிறந்த நாளை, மிக விமர்சையாக கொண்டாடும் வட கொரிய அதிபர் கிம் ஜாங், இந்த ஆண்டு பிறந்தநாள் விழாவைக் கொண்டாடவில்லை. இதற்கு, கொரோனா வைரஸ் தான் காரணம் என்று கூறப்பட்டு வந்தது. அத்துடன், வட கொரிய அதிபர் கிம் ஜாங், கடைசியாக வெளியே தோன்றியது ஏப்ரல் 11 ஆம் தேதி என்றும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடல்நிலை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர், கவலைக்கிடமாக உள்ளதாகக் கடந்த வாரம் செய்திகள் வெளியானது.

மேலும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இதய சிகிச்சை தோல்வியில் முடிந்ததால், அவர் கோமாவில் இருப்பதாக ஒரு தகவலும், ஏவுகணை சோதனையின் போது அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக மற்றொரு தகவலும் வெளியானது.

அத்துடன், கடற்கரையில் நடைப்பயிற்சி சென்றபோது கிம் ஜாங் மாரடைப்பால் கீழே சரிந்து விழுந்தார் என்றும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் கூறப்பட்டு வந்தது.

இதனால், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து உறுதிப்படுத்தாத பல தகவல்கள் வெளியானதால், கிம் ஜாங் உயிரிழந்து இருக்கலாம் என்ற ஊகத்தை, உலக நாடுகளிடையே ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், இந்த செய்தியில் உண்மை இல்லை என்றும், அவர் அதிக வேலைப் பளு காரணமாக ஓய்விலிருந்து வருவதாகவும் வட கொரியா அரசு விளக்கம் அளித்தது. அதேபோல், அண்டை நாடான தென் கொரியா, கிம் ஜாங் ஆரோக்கியத்துடனும் துடிப்புடனும் இருக்கிறார் என்று கூறி வருகிறது.

இந்நிலையில், வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்குத் தயாராவதாக, அமெரிக்காவின் செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்துள்ளன.

குறிப்பாக, கடந்த வாரம் அங்குள்ள வொன்சான் கடற்கரை ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள அவரது அரண்மனைக்குப் பக்கத்தில், ரயில் நிற்பது கடுப்படிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள், அமெரிக்க உளவு செயற்கைக்கோளில் சிக்கி உள்ளன.

அதேபோல், பொதுவாக ராணுவ அணிவகுப்புகள் மேற்கொள்வதற்காகத் தற்காலிகமான அமைப்புகள், ஏப்ரல் 18 ஆம் தேதிக்குப் பின்னர் தலைநகர் பியோங்யாங்கில் உருவாகி வருவதாக, அந்த படங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நிலைகுலைந்து காணப்படும் வடகொரியா, இப்படிப்பட்ட சூழலில் இதுபோன்று ஒரு மாபெரும் ராணுவ அணிவகுப்பு மேற்கொள்ளுவதற்கான சாத்தியமில்லை என்றும், அதுவும் எதிர்வரும் வாரங்களில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு அப்போதைய தலைவர் கிம் ஜாங் இல் மாரடைப்பால் மரணமடைந்த போதும், இதே போன்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு முன்னெடுக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

தற்போது, அதேபோன்ற ஒரு சூழல் அந்நாட்டில் இருப்பதாகவும், அதுபோன்ற ஒரு ஏற்பாடுகளை அந்நாட்டு தற்போது செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக, தலைநகர் பியோங்யாங்கில் அமைந்துள்ள மிரிம் ராணுவ அணிவகுப்பு பயிற்சி மைதானம் அருகிலேயே, தற்காலிகமான கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளது, உலக நாடுகளிடையே பேசும் பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.