இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்தைத் தாண்டி உள்ள நிலையில், பலி எண்ணிக்கை 884 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் தற்போது நிறைவடைந்தள்ளது. 

coronavirus India update 28,074 test positive

ஊரடங்கை மே 3 ஆம் தேதிக்கு பிறகு மேலும் நீட்டிக்க வேண்டுமென மஹாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல், கொரோனா பாதிக்கப்படாத இடங்களில் தொழில்களை தொடங்க சில மாநில முதலமைச்சர்கள் அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் கடன் உதவி வழங்குவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. Franklin Templeton நிறுவனம் 6 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை முடக்கியதால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், ரிசர்வ் வங்கி உதவ முன்வந்துள்ளது.

இந்தியாவிலேயே, அதிக பட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 8,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 342 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், கொரோனா பாதிப்பாளிருந்து இதுவரை அங்கு 1,076 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

coronavirus India update 28,074 test positive

டெல்லியில் இதுவரை கொரோனாவுக்கு 2,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் மூத்த மருத்துவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். அந்த மருத்துவரின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் புதிதாக 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,221 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ஜெய்பூரில் 817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் மேலும் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,177 ஆக உயர்ந்துள்ளது.  
ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்னூல் தொகுதி எம்.பி டாக்டர் சஞ்சீவ் குமாரின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இதுவரை 31 பேர், கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

அதேபோல், கேரளாவில் 458 பேருக்கும், கர்நாடகாவில் 503 பேருக்கும், ஆந்திர பிரதேசத்தில் 1,097 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,074 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுமைக்கும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 884 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 6,185 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.