கொரோனா பரவலைத் தடுப்பதற்காகச் சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால், மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் அனைத்தும் முழுமையாக வெறிச்சோடி காணப்படுகின்றன. 

இந்தியாவிலேயே, கொரோனா பாதிப்பில் தமிழகம் 6 வது இடத்தில் உள்ளது.

Chennai, Kovai, Madurai complete lockdown for 4 days

தமிழகத்தில் எதிர்பார்க்காத வகையில், கொரோனா வைரஸ் மிகப் பெரிய பாதிப்பையும், இழப்புகளையும் செய்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால், கிராமப்புறங்களில் நோய்த்தொற்று பரவுவது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெரு நகரங்களில் கொரோனாவின் தாக்கம் சற்றும் குறையாமல், கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் நேற்று முதல் முழு அளவிலான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த 5 மாநகராட்சி பகுதிகளில் உள்ள மிக முக்கியமான சாலைகள் அனைத்தும், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. 

இந்த மாநகராட்சி பகுதிகளில், அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள், பால் ஆகியவை பொதுமக்களுக்கு வீடு தேடிச் சென்று நடமாடும் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 

Chennai, Kovai, Madurai complete lockdown for 4 days

இதனால், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில், முழு ஊரடங்கைக் கண்டிப்புடன் அமல்படுத்துவதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேவை இல்லாமல் வெளியே சுற்றுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. ஆனால், அம்மா உணவகங்கள் வழக்கம் போல் திறந்து இருந்தன. அங்கு ஏராளமானோர் வந்து உணவு அருந்தினர்.

மதுரை மாநகராட்சியிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால், மக்கள் வீடுகளில் முடங்கினர். ஊரடங்கையும் மீறி வீதிகளில் சுற்றுபவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை நகரில் மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் தவிர அனைத்துக்கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. 

கோவையில், புறநகர் பகுதியிலிருந்து மாநகராட்சி பகுதியை இணைக்கும் எல்லைகள் முழுவதுமாக மூடப்பட்டன. நகரின் எல்லை பகுதிகளில் உள்ள 12 சோதனைச்சாவடிகள் மூடி சீல் வைக்கப்பட்டன. மேலும் 22 இடங்களில் தற்காலிகமாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மருந்து கடைகளில் மருந்து வாங்க சென்றவர்கள், டாக்டர் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சியின் முக்கிய சாலைகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முழு ஊரடங்கு காலத்தில், வெளியே வரும் நபர்களைக் கண்காணிக்கும் வகையில், ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திருப்பூர் மாநகரம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.

சேலம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால், அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகள், உழவர் சந்தைகள், காய்கறி சந்தைகள் என அனைத்தும் மூடப்பட்டு மாநகரமே வெறிச்சோடியது.

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 வயது சிறுமி உட்பட 10 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தஞ்சாவூரில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 6பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கடந்த 4 நாட்களில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

விருத்தாசலத்தில் கொரோனா பாதிப்பால் சீல் வைக்கப்பட்ட பகுதியில் இருவர் உயிரிழந்தள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக ஜெய்கணேஷ், ஷாஜகான் ஆகியோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.