இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,663 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 940 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவின் கோரப் பிடியில் இந்தியா சிக்கி, திக்குமுக்காடி வருகிறது. இதனால், நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

coronavirus India update 29,663 test positive

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி செப்டம்பர் இறுதியில் தயாராகிவிடும் என, புனேவில் உள்ள இந்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மும்பையின் தாராவி குடிசைப்பகுதியில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. தாராவியில் இதுவரை 14 உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8,590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை அங்கு 369 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,282 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டெல்லியில் நிதி ஆயோக் அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறும் என்று, நிதி ஆயோக் இணைச் செயலர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று 190 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியானது. அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,108 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு 54 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இதுவரை 877 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

coronavirus India update 29,663 test positive

ஆந்திரப்பிரதேசத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,259 ஆக அதிகரித்துள்ளது. .

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2,328 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஜெய்பூரில் 850 பேருக்கும், ஜோத்பூரில் 388 பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் இன்று 63 வயதுடையவர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழப்பு 19 அக அதிகரித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 113 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,986 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்க 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகாரில் இன்று 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 345 ஆக உயர்ந்துள்ளது. 

சண்டிகரில் 3 மருத்துவர்கள் உட்பட 9 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 45 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒடிசாவில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், மொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக 

உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு 37 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 62 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் இதுவரை 29,663 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 940 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் 16 மாநிலங்களில் கொரோனா தொற்று பதிவாகவில்லை என்றும், கடந்த 7 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.