கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாகத் தமிழகம் உட்பட நாடு முழுவதும் 2 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு காலம் முடிகிறது. 

Corona spread.. TN CM Meeting with 40 IAS officers

இதனால், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு குழுக்களை ஏற்படுத்த அரசு முடிவு செய்த நிலையில், 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 

இதனிடையே, கொரோனா வைரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கை நீட்டிப்பது அல்லது விலக்குவது உள்ளிட்ட விசயங்கள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பிலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் 40 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, மே 3 ஆம் தேதிக்குப் பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Corona spread.. TN CM Meeting with 40 IAS officers

ஆலோசனை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவுடன், ஆலோசனை நடத்தியதாக” குறிப்பிட்டார்.

மேலும், “கொரோனா தடுப்புப் பணியிலுள்ள அதிகாரிகளின் செயல்பாடு பாராட்டத்தக்கது” என்றும் முதலமைச்சர் பழனிசாமி புகழாரம் சூட்டினார்.

அத்துடன், “காய்கறி சந்தைகளில் தனி மனித இடைவெளியை மக்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை என்று சுட்டிக்காட்டிய முதலமைச்சர், கொரோனா நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள்” என்றும் அவர் கவலைத் தெரிவித்தார்.

“பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே, கொரோனா பரவலை முழுமையாகத் தடுக்க முடியும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.