கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை, பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இதனைக் கட்டாயம் அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டும் என்றும், தற்போது கொரோனா தாக்கத்திலிருந்து தப்பிக்க இது ஒன்றே ஒரே தீர்வு என்றும் பிரமர் மோடி உருக்கமாகப் பேசி வேண்டுகோள் விடுத்தார்.

அதனையடுத்து, பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கினாலும், சிலர் அத்துமீறி வெளியே நடமாடி வருகின்றனர். இதனால், நோய் மேலும் பரவ வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு பிரபலங்களும் வரவேற்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அதில், “எளிமையான விஷயங்களைச் செய்வது பெரும்பாலும் கடினம். ஏனெனில், அதற்கு நிலையான ஒழுக்கமும், மன உறுதியும் தேவை. 21 நாட்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சின்ன விஷயம் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற உதவும். கொரோனாவுக்கு எதிரான போரில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்” என்று சச்சின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேபோல், இது தொடர்பாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, “ பிரதமர் மோடியின் அறிவுரைப்படி 21 நாட்களுக்கு எல்லோரும் தயவு செய்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். சமூக விலகல் மட்டுமே, கொரோனா பரவுவதைத் தடுக்க தற்போது ஒரே வழி” என்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன், விராட்கோலி தனது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், “இது நமக்கு சோதனையான காலகட்டம். தற்போதைய சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டு, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நேரம் இது. நமக்கு வழங்கப்பட்ட அறிவுரையை அனைவரும் பின்பற்றுவோம். ஒற்றுமையாக இருப்போம். எல்லோருக்கும் நாங்கள் விடுக்கும் தாழ்மையான வேண்டுகோள் இது தான்” என்றும் விராட்கோலி பேசி உள்ளார்.