சி.ஏ.ஏ.வால் இஸ்லாமியர்களுக்கு பெரிய அச்சுறுத்தல் இருப்பதாகப் பீதி கிளப்பப்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக எனக்கு இன்னும் சம்மன் வரவில்லை” என்று தெரிவித்தார்.

அத்துடன், “நான் முறையாக வருமான வரி செலுத்தும் நபர். சட்டவிரோதமாக எந்த செயலும் செய்யவில்லை” என்றும் குறிப்பிட்டார்.

அப்போது, சி.ஏ.ஏ. பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்குப் பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், “சி.ஏ.ஏ.வால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு பிரச்சனை இல்லை என தெளிவாகக் கூறிவிட்டார்கள். இஸ்லாமியர்களுக்குப் பெரிய அச்சுறுத்தல் இருப்பதாகப் பீதி கிளப்பப்பட்டுள்ளது. சுய லாபத்திற்காக அரசியல் கட்சியினர் தூண்டிவிடுகின்றனர்.

பிரிவினையின் போது செல்லாமல், இதுதான் எங்கள் ஜென்மபூமி என இங்கேயே வாழும் இஸ்லாமியர்களை எப்படி வெளியே அனுப்புவார்கள்? இந்த சட்டத்தின் படி இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டால், அவர்களுக்காக நான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்” என்று ஆவேசமாகப் பேசினார்.

குறிப்பாக, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கும்போது தீர ஆராய்ந்து இறங்குங்கள். மாணர்வகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டால், அவர்கள் எதிர்காலமே பாதிக்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், “தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும்.
என்.பி.ஆர். அவசியம் தேவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான், யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும்” என்றும் கூறினார்.

இதனிடையே, ரஜினியின் பேட்டி தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “ரஜினியின் குரல் பாஜகவின் குரலாக உள்ளதாக” குற்றம் சாட்டினார்.

மேலும், “அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கு முன்பே, ரஜினி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்” என்றும் திருமாவளவன் குற்றம் சாட்டினார்.