தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு, மே 22 ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பொதுமக்கள் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக வன்முறை ஏற்பட்டதால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் உட்பட 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், பேரணியில் சமூக விரோதிகளால் தான் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அளித்த பேட்டி குறித்து விசாரணை நடத்துவதற்காக, நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது.

அதன்படி, தூத்துக்குடி அலுவலகத்தில் வரும் 25 ஆம் தேதி, நேரில் ஆஜராகி நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு, சீமான் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது ரஜினிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.