குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது டெல்லியில் கடந்த 4 நாட்களில் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

CAAProtests

அதன் ஒரு பகுதியாகத் தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது, தொடக்கத்தில் சில நாட்கள் தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதனையடுத்து, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தின் போது, இரவு 11.30 மணி அளவில், ஜாமியா பல்கலைக் கழகத்தின் 5 வது நுழைவாயில் அருகில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர். இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், இருசக்கர வாகனத்தில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், சிவப்பு நிறத்தில் ஓவர் கோர்ட் அணிந்திருந்ததாக, நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில்,  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.  

அத்துடன், மாணவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரவியதால், அங்கு அதிகமான பொதுமக்கள் கூடினர். இதனால், இரவு நேரத்தில் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்குள்ள ஜாமியா நகர் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீது டெல்லியில் கடந்த 4 நாட்களில் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

CAAProtests

கடந்த 30 ஆம் தேதி டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள், ராஜ்காட் நோக்கி பேரணியா சென்றபோது, திடீரென்று கூட்டத்திற்குள் பாய்ந்த இளைஞர் ஒருவர் பேரணியாகச் சென்றவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில், ஒரு இளைஞர் படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து,  கடந்த 1 ஆம் தேதி ஜாகின் பக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, 25 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதனையடுத்து, நேற்று நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, டெல்லியில் துப்பாக்கிச் கலாச்சாரம் பரவி உள்ளதால், பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.