தமிழகத்தில் நாளை முதல் மழையின் அளவு குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மற்றும் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் மிக கனமழையும், 43 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.

நாளை தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.

இதன் காரணமாக டிசம்பர் 1 ஆம் தேதி வரை தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பு அளவு 35 செ.மீ. ஆனால் 63 செ.மீ மழை பொழிவு கிடைத்துள்ளது. இது இயல்பை விட 80% கூடுதல். அதேப்போல் 60 செ.மீ கிடைக்க வேண்டிய இடத்தில், 113 செ.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 83% அதிகம்.

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் சென்னையில் 91 செ.மீ மழை பெய்துள்ளது. கடந்த 2015ல் நவம்பர் மாதத்தில் 102 செ.மீ மழை பெய்தது. நாளை முதல் அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தில் மெல்ல மெல்ல மழையின் அளவு குறையும். சென்னையிலும் குறையும்” இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று முறை சென்னை மாநகரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு கன மழை பெய்தால் எப்படி தாக்குபிடிப்பது என்று அச்சம் சென்னை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் மழையின் அளவு அடுத்த 2 நாடுகளில் குறையும் என தெரிவிக்கப்பட்டிருப்பது சென்னை மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.