மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வைத் தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்தது.

இதற்கு, பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், தேர்வில் தோல்வி அடையும் ஏழை மாணவர்கள், படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, வேலைக்குச் செல்லும் அவல நிலை ஏற்படும் என்றும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினார்.

மேலும், சமூக வலைத்தளங்களிலும் தமிழக அரசு மற்றும் பொதுத்தேர்வு எழுத உள்ள 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தொடர்பான மீம்ஸ் அதிக அளவில் பகிரப்பட்டன. அவற்றில் நிறைய மீம்ஸ் அனைவரையும் சிரிக்க வைப்பதோடு, வைரலானது.

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்ட தமிழக அரசு, மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாகத் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதற்குப் பதிலாக, பழைய தேர்வு நடைமுறையே மீண்டும் தொடரும்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.