ஊட்டியில் தென்பட்ட புதுரக வெட்டுக்கிளிகளால், தமிழகத்திலும் வெட்டுக்கிளிகளால் படையெடுத்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளைக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் தள்ளியுள்ள வெட்டுக்கிளிகளின் கூட்டம், இந்தியாவையும் தற்போது சூறையாடத் தொடங்கியுள்ளது. இதனால், இந்தியாவிலும் உணவுப்பஞ்சம் உருவாகும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.

விளைநிலங்களைச் சேதப்படுத்தும் பெரிய யானைகளையும், காட்டு விலங்குகளையும் எளிதாக விரட்டும் ஏழை விவசாயிகள், உருவத்தில் சிறியதாகக் காணப்படும் வெட்டுக்கிளிகளை விரட்ட முடியாமல் வடமாநில விவசாயிகள் திகைத்துப்போய் நிற்கின்றனர்.

இதனால், இந்தியாவில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த; இங்கிலாந்தின் மைக்ரான் உள்ளிட்ட 2 நிறுவனங்களிடமிருந்து 60 பூச்சிக்கொல்லி தெளிக்கும் அதிநவீன டிரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் சுமார் 303 பகுதிகளில் 47 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும் மத்திய வேளாண் அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியது.

ஒடிசாவிற்கும் வெட்டுக்கிளிகள் வர வாய்ப்புள்ளதால், வேம்பு விதைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லியைப் பயிர்களில் தெளிக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, வெட்டுக்கிளிகள் படை தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று, தமிழக வேளாண்துறை கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஊட்டியில் தென்பட்ட புதுரக வெட்டுக்கிளிகளால், தமிழகத்திலும் வெட்டுக்கிளிகளால் படையெடுத்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உதகை அடுத்த காந்தள் பகுதியில் புதிய ரக வெட்டுக்கிளியைப் பிடித்த வியாபாரிகள், இது வடமாநிலங்களில் வேளாண் பயிர்களை அழிக்கும் ரகத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் கலக்கமடைந்தனர்.

இதனையடுத்து, தென்பட்ட அந்த வெட்டுக்கிளிகளைப் பிடித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்த வெட்டுக்கிளிகள் தற்போது ஆய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஆய்வின் முடிவில், அது வடமாநிலங்களில் வேளாண் பயிர்களை அழிக்கும் பாலைவன ரகத்தைச் சேர்ந்த வெட்டுக்கிளிகள் இல்லை என்று தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.