தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு பல்வேறு விதிமுறைகளை வகுத்தது அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக, தமிழகத்தில் 4 வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. இந்நிலையில், கல்லூரிகளில் ஏசி பயன்பாட்டிற்குக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை வகுத்தது அண்ணா பல்கலைக்கழகம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

Anna University has set rules for engineering colleges

அதன்படி, “வரும் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு நடத்த வேண்டிய பாடங்களுக்கான தயாரிப்புகளை மின்னணு முறையில் பேராசிரியர்கள் முன்னெடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளது.

“பெரும்பாலும் மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் ஆகியவற்றில் மாணவர்களுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் விளக்கங்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும்,  வகுப்பில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்” என்றும் வலியுறுத்தி உள்ளது. 

அத்துடன், “கல்லூரிகளில் உள்ளே வரவும், வெளியே செல்லவும் என 2 வாயில்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்றும் அறிவுறுத்தி உள்ளது.

குறிப்பாக, “கல்லூரிக்குள் வரும் ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்” என்றும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

Anna University has set rules for engineering colleges

“தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில் வகுப்பில் மாணவர்கள் அமரவைக்கப்பட வேண்டும் என்றும், கல்லூரி பேருந்துகளில் இரண்டு நபர்கள் ஒரே இருக்கையில் அமரக்கூடாது” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

“கண்டிப்பாக, ஏசிக்கள் இயக்கப்படுகின்ற போது, அந்த அறையின் ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், fan mode ல் மட்டுமே ஏசிக்களை இயக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தி உள்ளது.

அதேபோல், “உணவு இடைவெளி ஒரே நேரத்தில் இல்லாமல், மாணவர்கள் ஒன்று கூடலைத் தவிர்க்கும் வகையில் உணவு இடைவெளிக்கான நேரம் பிரித்து அளிக்கப்பட வேண்டும்” என்றும் ஆலோசனை வழங்கி உள்ளது.

மேலும், “கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைவரும் தினந்தோறும் தங்கள் உடல் நலன் குறித்த விவரங்களைப் படிவத்தில் பதிவு செய்து கட்டாயம் வழங்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கும் ஊழியர்களை பணிக்கு அழைக்கக்கூடாது என்றும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களை மறு உத்தரவு வரும் வரை பணிக்கு அழைக்கக்கூடாது” என்றும் அண்ணா பல்கலைக்கழகம் வலியுறுத்தி உள்ளது.

“கல்லூரி வளாகம், வகுப்பறைகள் உள்ளிட்ட இடங்கள் தினசரி கிருமி நாசினி கொண்டு தூய்மைப் படுத்த வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை வகுத்து, அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.