மே 4 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று, உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, முதலில் 21 நாட்களும், பிறகு மே 3 ஆம் தேதி வரை என மொத்தம் 40 நாட்கள் பொதுமுடக்கம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, வரும் 3 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் நிறைவடைய உள்ள நிலையில், பொதுமுடக்கத்தை மே 16 ஆம் தேதி வரை, நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகளும், பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேலும் 15 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்க விரும்புவதாக, மகாராஷ்டிரா மாநில அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.

அதேபோல், மேற்கு வங்காளத்தில் மே மாத இறுதிவரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க நிபுணர்கள் அறிவுறுத்தி இருப்பதாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிவப்பு மண்டலங்களில் ஊரடங்கைத் தொடர அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் திட்டமிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ஹரியானா, இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள், ஊரடங்கை நீட்டிக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவைப் பின்பற்றத் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஊரடங்கு தொடர்பாக விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட பின்னர், கொரோனா தொற்றில் நல்ல பலன்கள் மற்றும் அதிகபடியான முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும்” குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, “மே மாதம் 4 ஆம் தேதி முதல், புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பல மாவட்டங்களில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும், இது தொடர்பாக விரிவான தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும்” என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், “கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிப்பு உள்ள மாவட்டங்களில், ஊரடங்கு நீட்டிப்பு இருக்கலாம்” என்றும் கூறப்படுகிறது.

மேலும், “ஊரடங்கு மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மே 4 ஆம் தேதி முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும்” என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.