சென்னையில் பேயாட்டம் போடும் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 678 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தொடக்கத்தில் மெல்ல எட்டிப்பார்த்த கொரோனா வைரஸ், அடுத்தடுத்த நாட்களில் வேகம் எடுத்து, தற்போது தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பேயாட்டம் ஆடி வருகிறது.

coronavirus Chennai update 678 test positive

சென்னையில் உணவு டெலிவரி செய்யும் 26 வயது ஊழியர் ஒருவருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், அந்த இளைஞர் உணவு டெலிவரி செய்த வீடுகளைக் கண்டறியும் பணியில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னையில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரின் குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தின் ஒப்பந்த மேலாளர் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த 80 க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

coronavirus Chennai update 678 test positive

சென்னையில், வார்டு வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளைக் கண்காணித்து வந்த இவருடன், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் துவங்கி, மேற்பார்வை அதிகாரிகள் வரை 80 க்கும் மேற்பட்ட நபர்கள் தொடர்பிலிருந்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த நபர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். 

இதனால், சென்னையில் இதுவரை 9 மாநகராட்சி பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில், அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், காவலர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை தாக்கி வந்த கொரோனா வைரஸ், தற்போது மாநகராட்சி பணியாளர்கள் தாக்கி வருவதால், மாநகராட்சி ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஒரு நாள் அல்லது 2 நாட்கள் விடுமுறை தேவை என்றும், விடுமுறை அளித்து சந்தையில் கிருமி நாசினியை தெளிக்க வேண்டும் என்றும், சந்தை இடமாற்றத்தால் காய்கறி வீணாகும் நிலை ஏற்படும் என்றும், வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

coronavirus Chennai update 678 test positive

சென்னையில் நேற்று மட்டும், மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சென்னை மக்கள் அனைவரும் கடும் பீதியடைந்துள்ளனர்.

இதில், சென்னை மயிலாப்பூரில் ஒரே தெருவில் உள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டள்ளது. இதனால், அந்த பகுதி முழுவதும் தீவிரமாக கண்காணிப்பட்டு வருவதால், அப்பகுதி மக்கள் கடும் பீதியடைந்தள்ளனர்.

குறிப்பாக, சென்னையில் கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 25 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் நேற்று வரை 168 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை, தற்போது 202 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதிகள் அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில், சென்னையின் பாதிப்பு விகிதம் 32.7 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.