முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் மே 2 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் கோர தாண்டவத்தால், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 2 வது முறையாகத் தேசிய ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது.

TN Cabinet meeting on May 2

முதலில் 21 நாட்கள் ஊடரங்க உத்தரவு அமலிலிருந்த நிலையில், கொரோனா தொற்றின் வேகத்தால், 2 வது முறையாக மே 3 ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

இதனால், மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலிலிருந்து வருகிறது. இந்நிலையில், வரும் மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிய உள்ள நிலையில். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நேற்றும் இன்றும் ஆலோசனை நடத்தினர். அதில், மாவட்ட ஆட்சியர்கள், சில ஆலோசனைகளை முதலமைச்சரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, சென்னையில் கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 25 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2058 ஆக அதிகரித்துள்ள நிலையில், இதுவரை கொரோனாவுக்க உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்த பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.

TN Cabinet meeting on May 2

இதனால், தமிழகத்தில் ஊரடங்கு நிலை, எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா? அல்லது சில தளர்வுகள் இருக்குமா? என்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், மே 2 ஆம் தேதி மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், இந்த அமைச்சரவைக் கூட்டம், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மேலும், இந்தியா முழுவதும் இதுவரை 31,625 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1,010 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், வரும் 3 ஆம் தேதி காலை பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையற்றவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அன்று மாலை தமிழகத்தில் ஊரடங்கு நிலை குறித்து முதலமைச்சர் பழனிசாமி, தமிழக மக்களிடையே உரையாற்றுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.