கொரோனா அச்சத்தில் தள்ளி நிற்கச் சொன்னவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் கேரளாவில் அதிகமாகப் பரவி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், நேற்று மாலை முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதே நேரத்தில், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள், மற்றவர்களுடன் குறிப்பிட்ட இடைவெளி விட்டு நிற்கும் படியும் தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது.

இந்நிலையில், உதகை அருகில் உள்ள நொண்டிமேடு பகுதியைச் சார்ந்த ஜோதிமணி, உதகை நகராட்சி சந்தையில் பாரம் தூக்கும் தொழில் செய்து வந்தார்.

நேற்று சந்தையில் வழக்கத்தை விட கூட்டம் அதிகம் காணப்பட்டதால், காலை முதல் மதியம் வரை நகராட்சி சந்தையிலேயே வேலை செய்துவிட்டு, அங்குள்ள உணவகத்தில் மதிய உணவு சாப்பிடச் சென்றுள்ளார்.

அங்கு, கேரளாவைச் சேர்ந்த தேவராஜ் என்பவர், அதே கடைக்கு சாப்பிட வந்துள்ளார். அப்போது, “நேற்று தான் கேரளாவிலிருந்து வந்ததாக” உணவகத்தின் உரிமையாளரிடம் தேவராஜ் கூறியுள்ளார்.

அப்போது, அருகில் நின்றிருந்த ஜோதிமணி, கேரளாவில் கொரோன தொற்று அச்சம் நிலவுவதால், எதார்த்தமாக தேவராஜ்யை சற்று தள்ளி நிற்கும்படி கூறி உள்ளார். இதனால், அவர்கள் இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறுது நேரத்தில், இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

அப்போது, வெங்காயம் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து தேவராஜ், “உங்கள் ஊரில் நோய் வரதா?” என சத்தம் போட்ட படியே, ஜோதிமணியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜோதிமணியை, அங்கு நின்றிருந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தேவராஜை கைது செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கொரோனா அச்சத்தில் தள்ளி நிற்கச் சொன்னவர், குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் உதகையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.