மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1,296 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான டெண்டர்கள் விடப்பட்டு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

இதன்தொடர்ச்சியாக இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பேசிய முதலமைச்சர்,

``முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் விநியோக திட்டம் 2023ல் நிறைவு பெறும். புதிய திட்டத்தால் மதுரையில் 1.10 லட்சம் கூடுதல் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம். விரைவாக அந்தத் திட்டம் துவங்கவிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, மருத்துவமனையையும் மதுரையில் உருவாக்கித் தந்திருக்கின்றோம்.

அதேபோல, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர வரலாற்றுச் சிறப்புமிக்க 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கின்றோம். சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் நிலை பற்றி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கிராமப்புறத்தில் படிக்கின்ற மாணவர்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றார்கள் என்று அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்கள். அப்படி அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற 41 சதவிகிதம் மாணவர்களில் கடந்த ஆண்டு நீட் தேர்வு மூலமாக 6 மாணவர்களுக்குத் தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், இந்த 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் மூலமாக அரசுப் பள்ளிகளில் படித்த 313 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கின்றது. இந்த உள் ஒதுக்கீட்டின் மூலமாக சேலம் மாவட்டத்தில் மட்டும் 3 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், 13 மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், 10 ஆதிதிராவிட மாணவர்கள், என 26 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கின்றது.

சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவியர்களின் மருத்துவக் கல்லூரிக் கனவை நனவாக்கிய அரசு எங்களுடைய அரசு. சிறப்பான சாலைகள் அமைத்துக் கொண்டிருக்கின்றோம், ஏராளமான தடுப்பணைகள் கட்டிக் கொண்டிருக்கின்றோம், நீண்ட காலமாக தூர்வாரப்படாத ஏரிகளெல்லாம் விவசாயப் பிரதிநிதிகளை கொண்டு தூர்வாரி, பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் சேமித்து வைக்கக்கூடிய ஒரு திட்டத்தை எங்களுடைய அரசுதான் உருவாக்கித் தந்திருக்கின்றது

1916-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால், இடவசதி போதாமல் உள்ளது என்ற கோரிக்கையை ஏற்று, அரசு கூடுதல் கட்டடத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கி, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது" என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.

இந்த விழாவில், முதல்வர், கலெக்டர் அலுவலகத்தில் ரூ.33 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் உள்பட ரூ.69 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, வேலுமணி, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.