தலைநகர் டெல்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் நிலையில், ``புதிய வேளாண் சட்டங்களால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை, விவசாயிகளுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கும்" என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் முதல்வர்  பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, இப்படியொரு கருத்தை பகிர்ந்திருக்கிறார்.

அப்போது பேசிய அவர், ``மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. இந்த சட்டத்தினால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதனை தமிழக எதிர்க்கட்சிகள் வெளிப்படையாக சொல்ல வேண்டும். தமிழகத்தில் அரசியல் நடத்த எந்தவித காரணமும் கிடைக்காததால் ஸ்டாலின் அகில இந்திய அரசியல்வாதி போல இந்தப் பிரச்னையை கையில் எடுத்துள்ளார்.

கடந்த ஆண்டில் 23 லட்சம் மெட்ரிக் டன் அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது வெளிச் சந்தையில் கேட்க ஆளில்லை. உற்பத்தி அதிகமாகும் போது விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தடுத்து நிறுத்தும். கடந்த 29 வருடங்களாக விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் எனக்கு இது நிச்சயமாக தெரியும். ஸ்டாலின் போன்றவர்களுக்கு தெரியாது.

போர் பஞ்சம் வறட்சி ஆகியவை ஏற்பட்டால் ஏற்கனவே உள்ள சட்ட நடைமுறைகள்  விவசாயிகள் பாதுகாக்கப் படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது விவசாயிகளை சந்தித்து கேட்ட போது மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் குறித்து யாரும் குறை சொல்லவில்லை ஹரியானா பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் தங்களுடைய விலை பொருட்களை விற்கும் போது 8 சதவீதம் அளவிற்கு வியாபாரிகளுக்கும் ஏஜென்ட் களுக்கும் கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை விற்க எந்தவித கட்டணமும் செலுத்தக்கூடாது. வரி வசூல் செய்யக்கூடாது என சொல்கிறது. மேலும் தங்களுடைய விளைபொருட்களை இந்தியா முழுவதும் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதை மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தடுத்து நிறுத்துகிறது" என்று கூறினார்.

கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வரும் பாமகவின் போராட்டம் குறித்து, பத்திரிகையாளர் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், ``கூட்டணியில் இருந்து கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்துவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த முதல்வர், கூட்டணி என்பது வேறு; கொள்கை என்பது வேறு. அவரவர் கட்சிக்கு ஏற்ப கொள்கைகளை கடைபிடிக்கின்றன. தமிழகத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கேற்ப இட ஒதுக்கீடு வழங்கப்படும்" என்றார். 

பின்னர், ரஜினி புதிய கட்சி தொடங்குவது குறித்து கேட்கப்பட்டதற்கு, ``தகவலை முழுமையாக தெரிந்து கொண்டு பின்னர் கருத்து சொல்கிறேன்" என்றார்.