சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து இன்னும் ஓரிரு நாளில் அவர் விடுதலையாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தின் போது, கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தின் போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு, கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று, தனி நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் செய்த மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதி குமாரசாமி, தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக, தண்டனை ரத்து செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இறுதியில், நீதிபதி மைகேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா உயிரிழந்ததால், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதன்படி, குற்றச்சாட்டுக்கு ஆளான சசிகலா உட்பட 3 பேரும், பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

அத்துடன், கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் 3 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்களாகச் சிறை தண்டனையை, சசிகலா தற்போது அனுபவித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், “அபராத தொகையை செலுத்தினால் சசிகலா, வருகிற ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும், அபராதத்தை கட்ட தவறினால், அவர் மேலும் ஒரு ஆண்டு காலம் சிறையிலேயே தண்டனை அனுபவிக்க வேண்டும்” என்றும், சிறை நிர்வாகம் கூறியிருந்தது.

இதனையடுத்து, அபராதத் தொகையான 10.10 கோடி ரூபாயை வரையோலையாக பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு செலுத்தியது. இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

இதன் காரணமாக, சிறையில் இருந்து சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்ற தகவல்களும், கடந்த வாரம் வெளியானது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், “நன்னடத்தை மற்றும் சிறையில் கன்னட மொழியைக் கற்றது போன்ற காரணங்களால் தண்டனைக் காலம் முடியும் முன்னரே வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி சசிகலா விடுதலையாக இருக்கிறார் என தஞ்சாவூர் உள்ள சசிகலாவின் உறவினர்கள் வட்டாரத்தில்’ கடந்த வாரம் பேசப்பட்டு வந்தது. 

மேலும், இது குறித்து சசிகலா உறவுகளுக்கு நெருக்கமானவர்களிடம் கூறுகையில், “சசிகலா வரும் 3 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் எனச் சிறைத்துறை வாய் மொழியாகவே அவர் தரப்புக்குத் தகவல் தெரிவித்திருக்கிறது என்றும், ஆனால் முறைப்படி அதற்கான எழுத்துப்பூர்வமான ஆர்டருடைய சான்றிதழ் இன்னும் சசிகலாவின் கைக்கு வரவில்லை” என்றும், கடந்த வாரம் கூறப்பட்டது. 

சசிகலாவைப் பொறுத்த வரை அவர், ஜெயலலிதாவின் நினைவு தினத்துக்கு முன்பே வெளியே வந்துவிட வேண்டும் என்பதில், அவர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்பட்டது. 

குறிப்பாக, சசிகலா விடுதலையான பிறகு சென்னை வரும் அவர், நேராக ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று மரியாதை செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது. போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்துக்கு எதிரியிலேயே சசிகலாவுக்காகப் புதிய வீடு ஒன்று தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. அதற்கான பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை என்பதால், தியாகராய நகரிலுள்ள இளவரசியின் வீட்டிலேயே தங்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

அதன் படி, வரும் 5 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் வருகிறது. அன்றைய தினத்தில் சென்னையில் இருக்க வேண்டும் என்பது சசிகலாவின் எண்ணம் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே விடுதலையாகி வெளியே வருவதற்கான பணிகள் 90 சதவிகிதம் முடிவடைந்து விட்டதாகவும், ஜெயலலிதாவின் நினைவு நாளில் அவரது சமாதிக்குச் சென்று மாலையிட்டு அஞ்சலி செலுத்திவிட்டு, அரசியலில் தனது 2 வது இன்னிங்ஸை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அத்துடன், சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மனு அளித்திருந்த நிலையில், இது தொடர்பாக விரைவில் முடிவெடுத்துத் தெரிவிக்கப்படும் என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், சிறையில் உள்ள சசிகலா எந்தநேரமும் விடுதலையாக வாய்ப்புள்ளதாகவும் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

முக்கியமாக, சசிகலா அடுத்த ஓரிரு நாளில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிமுகவில் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, “சசிகலாவின் விடுதலையானது கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்று, முதலமைச்சர் பழனிசாமி கடந்த சில 
வாரங்களுக்கு முன்பே செய்தியாளர்களிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.