மணப்பெண்ணுக்குப் பதிலாக வீடியோகாலில், மாப்பிள்ளை செல்போனுக்கு தாலிகட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது.

உலகம் எவ்வளவு வேகமாக மாறி வருகிறது என்பதற்கு, இந்த திருமணமே ஒரு உதாரணம். அதுவும் கலாச்சாரங்கள் நிறைந்து காணப்படும் இந்தியாவில் இந்த மாற்றத்தை யோசித்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆனாலும், ஒரு தம்பதி இதை நடத்தி காட்டியிருக்கிறது.

கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த கங்கனசேரியைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஸ்ரீஜித் நடேசனுக்கும், ஐ.டி ஊழியர் அஞ்சனாவுக்கும் கடந்தாண்டு நவம்பர் 9 ஆம் தேதி, திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதன்படி, ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். அதே நேரத்தில், மணமகள் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், உத்தரப்பிரதேசத்திலிருந்து மணப்பெண், கேரளாவுக்குத் திரும்ப முடியவில்லை.

இதனால், இருவீட்டார் பெற்றோர்களும் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, உறவினர் ஒருவர் அளித்த யோசனையின் பேரில், வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம், திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் இருந்தபடி செல்போனில் தோன்றிய மணமகள் அஞ்சனாவுக்கு, கேரளாவிலிருந்தபடியே மாப்பிள்ளை ஸ்ரீஜித் தாலி கட்டினார். அப்போது, மாப்பிள்ளை ஸ்ரீஜித் செல்போனுக்கு தாலி கட்ட, மறுமுனையிலிருந்த மணமகள் அஞ்சனா, அங்கிருந்தபடியே தனக்கு தானே தாலி கட்டிக்கொண்டார்.

வீடியோகாலில், மாப்பிள்ளை செல்போனுக்கு தாலிகட்டிய திருமண வைபவத்தைத் தொடர்ந்து, இருவரும் அவரவர் தங்கியுள்ள பகுதிகளிலேயே தற்போது வசித்து வருகின்றனர்.

இதனிடையே, பண்பாடு மற்றும் கலாச்சாரங்களுக்குப் பெயர் போன கேரளாவில், மணப்பெண்ணைத் தொட்டு தாலி கட்டாமலேயே, செல்போனுக்கு தாலி கட்டிய இந்த திருமண நிகழ்வு, இணையத்தில் வைரலாகி வருகிறது.