கேரளா இளம்பெண் கொலை வழக்கில் குமரியை சேர்ந்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் திருவனந்தபுரம் அருகே இளம் பெண் கொலையில் கைதான குமரி ரவுடியை அஞ்சுகிராமம் அழைத்து வந்து கொலைக்கு பின் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்து எடுத்து சென்ற நகையை அவர் அடகு வைத்த நிதி நிறுவனத்தில் இருந்து போலீசார் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடம் பகுதியை சேர்ந்தவர் மெர்வின் ராஜேந்திரன் அவருக்கு வயது 38 பிரபல ரவுடியான இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆரல்வாய்மொழியில் சுங்கத்துறை ஊழியர் சுப்பையா மற்றும் அவரது மனைவி மகளை கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை தற்போது சிபிசிஐடி விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் 3 ஆண்டு சிறை இருந்த மெர்வின் ராஜேந்திரன் பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பேரூர்கடையில் ஒரு டீக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி திருவனந்தபுரம் பேரூர் கடை அருகே அம்பலமுக்கு பகுதியில் செடிகள் விற்பனை செய்துவந்த நெடுமங்காடு பகுதியை சேர்ந்த வினிதா 38 வயது என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயின் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து பேரூர் கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது மெர்வின் ராஜேந்திரன் அந்த பகுதியில் வலம் வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர் தமிழகத்தில் நுழைந்தது தெரியவந்தது. காவல் கிணறு பகுதியில் உள்ள ஒரு விடுதியில் பதுங்கி இருந்த ராஜேந்திரனை கேரளா போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர் வினிதாவை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும் வினிதா மட்டும் தனியாக இருந்ததை பார்த்ததும் வினிதாவின் செயினை பறித்ததாகவும் அவர் கூச்சல் போட்டதால் நகையை பறித்து விட்டு கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. அந்த நகையை அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு நகை அடகு கடையில் ரூ.95,000 அடகு வைத்துள்ளதாக போலீசாரிடம் கூறினார். இதையடுத்து ராஜேந்திரனை இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அழைத்து வந்தனர். நகையை அடகு வைத்த அவரை அழைத்து சென்று நகையை மீட்டனர் பின்னர் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் திருவனந்தபுரம் அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் கொலையாளி ஒவ்வொரு இடத்திலும் தனது தந்தை பெயரையும் முகவரியையும் மாற்றி கொடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் MBA பட்டதாரி ஆன ராஜேந்திரன் பணத்திற்காக நடத்தும் கொலை - கொள்ளை மூலம் கிடைக்கும் பணத்தில் அதிக பங்கு ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக தெரிய வந்தது. வினிதா என்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த செயின் அடகு வைத்து கிடைத்த ரூ.95000-ல் ரூ.32,000-ஐ ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ததும் தெரியவந்தது.

மேலும் ஐந்து பேரை கழுத்தை அறுத்து கொலை செய்த இந்த கொடூர ரவுடி மேலும் எங்கெல்லாம் கைவரிசை காட்டி உள்ளார் என்பது கூடுதல் விசாரணையில் தெரிய வரும். தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறை விசாரனைக்காக ஏழு நாட்கள் போலீஸ் கஸ்டடியில் உள்ள ராஜேந்தரின் போலீஸ் விசாணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது . உயர் அதிகாரிகளிடம் மட்டுமே விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.