மகளிர் விடுதி பெண் வார்டன், ஆண் விடுதி வார்டன் மீது பாலியல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் வார்டனாக பணியாற்றி வருகிறார் லட்சுமி.

அதேபோல், விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அரசு விடுதி வார்டனாக முருகேசன் பணியாற்றி வருகிறார்.

அத்துடன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவராகவும் முருகேசன் பொறுப்பு வகித்து வருவதால், லட்சுமியும் அதில் உறுப்பினராக உள்ளார்.

இதனிடையே, முருகேசன் தன்னிடம் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து, மனைவி போல் தன்னிடம் நடந்துகொள்ளும்படி, தன்னை தொடர்ந்து கட்டாயப்படுத்தியதாகக் கண்ணீர் மல்க பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “முருகேசனின் பாலியல் வற்புறுத்தலுக்கு நான் உடன்படாததால், 25 முறை உயர் அதிகாரிக்கு என்னைப் பற்றி புகார் அளித்துள்ளதாகக் கவலை” தெரிவித்துள்ளார். “ஆனால், அவரின் செயல்பாடுகள் பற்றி உயர் அதிகாரிகளுக்குப் புகார் அளித்தும், அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும், தேசிய பெண்கள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்துள்ளதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “இது தொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவித்தால், அவர்கள் ஆதாரம் கேட்பதாகவும் வேதனை” தெரிவித்துள்ளார்.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள முருகேன், “என்னிடம் பணம் பறிக்கும் முயற்சி என்றும், இது தொடர்பா என்னிடம் சிலர் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி வருவதாகவும்” குற்றம்சாட்டி உள்ளார்.

இதனிடையே, அரசு வார்டன்கள் இருவர், ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி உள்ள நிலையில், இருவர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.