அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகையின் போது, குஜராத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதிகளை மறைத்து மிகப் பெரிய நீண்ட சுவர் எழுப்பப்படுவது பல்வேறு விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், வரும் 24 ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Donald Trump India visit Gujarat government

இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்விலும் அவர் கலந்துகொள்ள உள்ளார்.

இதனிடையே, அவர் சாலை மார்க்கமாக வர உள்ளதாகத் தெரிகிறது. இதனால், அகமதாபாத் சாலையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், சாலை மார்க்கமா வரும்போது, அந்த குடிசை பகுதிகளைப் பார்த்தால், அவர் தவறாக நினைக்க நேரிடும் என்பதாலும், அல்லது இந்தியா ஏழ்மை நாடு என்று நினைத்துவிடக்கூடும் என்பதாலும்.. முன்கூட்டியே, அந்த பகுதியில் அகமதாபாத் நகராட்சி சார்பில், சுவர் எழுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, காந்தி நகர் முதல் அகமதாபாத் வரை சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு மிகப் பெரிய சுவர் கட்டப்பட்டு வருகிறது. அந்த மிகப் பெரிய சுவரின் உயரம் 6 அடி முதல் 8 அடி உயரம் வரை தற்போது கட்டப்பட்டு வருகிறது.

Donald Trump India visit Gujarat government

இதனிடையே, இந்த பகுதியில் மிகப் பெரிய சுவர் கட்டப்படுவதால், அந்த பகுதியில் கடைகள் வைத்துப் பிழைப்பு நடத்துவார்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், இதுபோன்ற சுவர் எழுப்பப்படுவதால், வெகு தூரம் நடந்து சென்று சாலையைக் கடக்க நேரிடும் என்றும், அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், இந்த சுவர் எழுப்ப ஒதுக்கப்பட்ட நிதியை, ஆக்கப் பூர்வமாகச் செலவு செய்ய அரசு பயன்படுத்தி இருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கட்டப்பட்டு வரும் மிகப் பெரிய மற்றும் மிக நீளமான சுவர், இந்தியாவின் ஏழ்மை அமெரிக்காவிடம் மறைப்பதற்காகவே கட்டப்படுகிறது என்ற விமர்சனம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.