ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்ற வாதத்தை ஏற்று, வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி ஏற்றது. அப்போது, அந்த ஆட்சிக்கு போதிய ஆதரவு இல்லை என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் எதிர் கட்சிகள் கோரியது.

supreme court judgment eps ops 11 TN mlas

அதன்படி, கடந்த 2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சர் பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். 

இதனையடுத்து, 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி, திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், வழக்கு தொடர்ந்தனர். இந்த அனைத்து வழக்குகளையும், சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

supreme court judgment eps ops 11 TN mlas

இதனையடுத்து, திமுக எம்.எல்.ஏ. சக்கரபாணி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரைத் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்ற வாதத்தை ஏற்று, வழக்கை முடித்து வைத்தது.