செவிலியர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கி நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த 50 வயது பெண், மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். 

Death sentence for 2 men who raped a 50 year old

இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால், இவரது மகன் கோவையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில், தங்கிப் படித்து வந்தார். இதனால், அவர் மட்டுமே தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதனை அறிந்துகொண்டு, தனியாக வசித்து வந்த செவிலியரை நோட்டமிட்ட ஒரு மர்ம கும்பல், கடந்த 2008 ஆம் ஆண்டு, செவிலியரின் வீட்டிற்குள் நுழைந்து, அவரது வாயில் துணியை வைத்துத் திணித்து, அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கொலை செய்துள்ளனர்.

அத்துடன், வீட்டிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இதனையடுத்து, இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், டி.என்.ஏ சோதனை மூலம், கல்லிடைக்குறிச்சி ராஜேஷ், அயன்சிங்கம்பட்டி வசந்தகுமார் ஆகிய 2 பேர் தான் குற்றவாளிகள் என்பதைக் கண்டுபிடித்தனர்.

இந்த வழக்கு, திருநெல்வேலி மகளிர் நீதிமன்ற நீதிபதி இந்திராணி, விசாரித்து வந்த நிலையில், நேற்று மாலை தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட வசந்தகுமார், ராஜேஷ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை வழங்கி நீதிபதி இந்திராணி, அதிரடியாக உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 4 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார். பின்னர், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.