முன்னாள் வீரர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டக் அவுட்டாகி, சேவாக் ரன் அவுட் ஆனாலும், இந்தியா லெஜண்ட் அணி அபார வெற்றி பெற்றது.

சாலை பாதுகாப்பு குறித்து மும்பையில் விழிப்புணர்வு டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

நேற்றைய போட்டியில், இந்திய ஜாம்பவான்கள் அணி, இலங்கை ஜாம்பவான்கள் அணியுடன் மோதியது.

கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள், இந்த போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில், டாஸ் வென்ற இந்திய லெஜண்ட் அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை அணி சார்பில் தில்ஷான், குபுஜேதெரா ஆகியோர் தலா 23 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் முனாப் பட்டேல் 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.

இதனால், 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின் - சேவாக் ஜோடி களமிறங்கியது.

இருவரும் மைதான்திற்குள் வந்ததும், ரசிகர்கள் விசில் சத்தத்தில் மைதானமே அதிர்ந்தது. சச்சின் தெண்டுல்கர் - ஷேவாக் விளையாட தொடங்கியதுமே, ரசிகர்கள் உற்சாக மிகுதியால் எழுப்பிய சத்தம் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது. ஆனால், சச்சின் தான் சந்தித்த 2 வது பந்திலேயே டக் அவுட் ஆகி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.

அதேபோல், எப்போதும் அதிரடி காட்டும் சேவாக், இந்த முறை 3 ரன்கள் எடுத்திருந்தபோது, ரன் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி அளித்தார். யுவராஜ் சிங்கும் ஒரு ரன்னில் வெளியேறினார்.

இதனால், இந்திய அணி தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகமது கைஃப் நிதானமாக விளையாடி 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய இர்பான்பதான் அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகள் விளாசி 57 ரன்கள் எடுத்து, அணியை வெற்றிப் பத்தைக்கு அழைத்துச் சென்றார்.

இர்பான்பதானின் அதிரடி ஆட்டத்தால், 18.4 ஓவர்களிலேயே இந்திய ஜாம்பவான் அணி அபார வெற்றி பெற்றது.