காதலிக்க மறுத்த மாற்றுத்திறனாளி பெண்ணின் இருசக்கர வாகனத்துக்கு, காதலன் தீ வைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. 

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளம் பெண் மல்லிகா, சோழவரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரனை காதலித்து வந்துள்ளனர். 

Man burns vehicle of girl refusing to love him

இருவரும் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வந்த நிலையில், பிரபகாரனின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் காணப்பட்டதை மல்லிகா, உணர்ந்துள்ளார். 

இது தொடர்பாக மல்லிகா காதலனிடம் கேட்க, இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பிரபகாரனின் செயல்பாடு பிடிக்காமல், அவரை விட்டு மல்லிகா விலகி உள்ளார்.

ஆனால், மல்லிகாவை விடாமல் பின் தொடர்ந்து வந்த பிரபாகரன், தன்னை காதலிக்க வேண்டும் என்று தொடர்ந்து கட்டாயப்படுத்தி உள்ளார். மேலும், காதலிக்க மறுத்தால், கொலை செய்துவிடுவதாகவும், இருசக்கர வானத்தை தீ வைத்து எரித்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

பிரபாகரனின் இந்த மிரட்டலை பெரிதுப்படுத்ததா மல்லிகா, இதைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி மல்லிகா வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த, அவருடைய மாற்றுத்திறனாளிக்கான இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது.

Man burns vehicle of girl refusing to love him

இதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த மல்லிகா, அங்குள்ள செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், பிரபாகரன் தன் நண்பனுடன் வந்து மல்லிகாவின் இருசக்கர வாகனத்தைத் தீ வைத்து எரிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, காதலிக்க மறுத்த மாற்றுத்திறனாளி பெண்ணின் இருசக்கர வாகனத்துக்கு, காதலன் தீ வைத்த சிசிடிவி காட்சிகள், தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.