தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கை, எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி, துக்ளக் இதழின் 50 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்வு குறித்தும், அப்போது தந்தை பெரியார் செய்த செயல்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

Court dismisses petition against Rajinikanth Periyar issue

இதற்குத் திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தொடர்பாக ரஜினிகாந்த் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. 

மேலும், நடிகர் ரஜினிகாந்த் கூறியது பொய்யான தகவல் என்றும், இதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தந்தை பெரியார் ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை, “பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில், ரஜினி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து, சென்னை காவல் ஆணையர் மற்றும் திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.

Court dismisses petition against Rajinikanth Periyar issue

அதன்படி, காவல்துறை சார்பில் விளக்கம் தரப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆறுமுகம் ஆஜராகி இடையீட்டு மனு தாக்கல் செய்தார். 

மேலும், “நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை” என்றும் அவர் வாதிட்டார்.
பின்னர், ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கில், இன்று தீர்ப்பு வழங்குவதாக, நீதிபதி தெரிவித்தார்.

அதன்படி, இன்று மாலை ரஜினிகாந்த் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கை, தள்ளுபடி செய்து” நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், இடையீட்டு மனுவைத் திரும்பப் பெறுமாறும் நீதிபதி அறிவுறுத்தினார்.