கொரோனா உயிரிழப்பில் சீனாவை, இந்தியா முந்திய நிலையில், உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட பட்டியலில் இந்தியா 9 வது இடம் பிடித்துள்ளது.

கொரோனா என்னும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் ஒன்று, இன்று உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 59,04,284 ஆக அதிகரித்துள்ள நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,61,996 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1,65,729 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், சீனாவில் 84,106 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட உலக தர வரிசைப் பட்டியலில், இந்தியா தற்போது 9 வது இடத்திற்கு வந்துள்ளது.

குறிப்பாக, சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 4,638 ஆக இருந்த நிலையில், இந்தியாவில் 4,711 ஆக அதிகரித்துள்ளது. இதனால். கொரோனா இறப்பு விகிதத்தில் இந்திய பலி எண்ணிக்கையானது, சீனாவின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், அமெரிக்காவில் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்கா அந்த பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் கொரோனா பாதிப்பில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்த பட்டியலில், இந்தியா 9 வது இடம் பிடித்துள்ளது.

பட்டியலில் 10 வது இடத்தில் துருக்கியும், 11 வது இடத்தில் ஈரானும், 12 வது இடத்தில் பெரு, 13 வது இடத்தில் கனடா ஆகிய நாடுகள் அடுத்தடுத்து கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.