ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி இறப்பு தொடர்பாக, மருத்துவமனை நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி 63 வயதான விஜயலட்சுமி, கடந்த 2 வாரங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அப்போது, ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆறுதல் கூறியதுடன், அவரது மகன்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் அவர் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சேகர் பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், ஒபிஎஸ் மனைவி விஜயலட்சுமி உயிரிழந்தது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், “தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வத்தின் மனைவி 66 வயதான விஜயலட்சுமி, உடல் நலக்குறைவால் சென்னை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்” என்று, குறிப்பிட்டு உள்ளது.

“அவரது உடல் நலமடைந்து, மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்ப இருந்த நிலையில் தான், அவர் இன்று அதிகாலை 5 மணி அளவில் தீவிர மாரடைப்புக்கு உள்ளாகி இருக்கிறார்” என்று, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“உடனடியாக, இதய நோய் நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அது பலன் அளிக்காமல் இன்று காலை 6.45 மணி அளவில் அவர் உயிரிழந்தார்” என்று, ஜெம் மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

இந்த சூழலில் தான், தமிழக சட்டப்பேரவைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், “ஓ.பன்னீர் செல்வம் மனைவி இறந்த தகவல்” தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக அவர் விரைந்து சென்று மருத்துவமனையிலேயே அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, ஓ.பன்னீர் செல்வத்தின் கைகளைப் பிடித்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த ஒ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மருத்துவமனைக்கு நேரில் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், தமிழக எம்.பி.யுமான திருமாவளவன், விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதனிடையே, விஜயலட்சுமியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் எடுத்துச்செல்லப்படுகிறது.