'வரும் செப்டபம்ர் 1 ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரிகள் திறப்பது உறுதி” என்று, தமிழ் நாடு அரசு அறிவித்து உள்ளது. 

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உத்தேச தேதியை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு கடந்த வாரம் வெளியிட்டு இருந்தது.

“தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன், கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளதாக” தமிழக அரசு, கடந்த 6 ஆம் தேதி கூறியிருந்தது.

இந்த நிலையில் தான், தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட இருக்கின்றன. 

அதாவது, “தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதால் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்பது குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய் பேரிடர் துறை உயர் அதிகாரிகள், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல் துறை, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போது தமிழகத்தில் நிலவும் கொரோனா பரவல் நிலவரம் பற்றி விரிவாக ஆலோசிக்கப்படடது. 

இவற்றுடன், “கேரளாவில் கொரோனா தொற்று படு வேகமாக பரவி வருவதால், இந்த சூழலில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதால் மாணவ - மாணவிகளுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா?” என்பது குறித்தும் இன்றைய தினம் ஆலோசிக்கப்பட்டது. 

“பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் ஒழுங்காக கடைப்பிடிக் கப்படுமா?” என்பது குறித்தும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

முக்கியமாக, “கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களை பள்ளியில் எவ்வாறு கண்டறிவது? என்பது பற்றியும், அப்படி பாதிக்கப்படும் மாணவர்கள் உடனே சிகிச்சை அளிக்க என்னென்ன வசதிகள் செய்யப்பட வேண்டும்?”என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பின் படி, நாளை மறுநாள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 

முதலில் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அதே போல், கல்லூரிகளும் அன்றைய தேதியில் இருந்து திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இதையடுத்து, பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித் துறை ஆயத்தமாகி வருகிறது என்றும், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஷ

அதன் படி, பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும் என்றும், வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தமிழ்நாட்டில் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.